சில மாதங்கள் முன் ந.பிச்சமூர்த்தியின், ‘சுமைதாங்கி’ என்ற கவிதையை வாசித்தேன்.அது, இப்போது தான் எனக்கு புரிகின்றது. ஞானம் தான் எத்தனை பெரிய சுமை! அதை இறக்கி வைத்துவிட்டு நம்மால் தொடர முடியுமா? ஒரு சிறுவனின் நேர்மையான ஞானத் தேடலுடன் தொடங்குகிறது ‘கௌஸ்துப’ காண்டம். சுடுகாட்டு சித்தன் அவனில் தன் சிஷ்யனையும், சிறுவன் சித்தனில் குருவையும் கண்டடைகிறார்கள்.காசியபன் என்று தன் சீடனுக்கு பெயர் சூட்டி சித்தன், அவனுக்கு அளிக்கும் முதல் பாடம், ‘அறியக்கூடியவற்றை அறிந்துவிட்டு, உன் அடையாளத்தை தகர்த்துக்கொண்டு விடு.அடையாளங்கள், உன்னை நிரந்தரத்திலிருந்து நிரந்தமின்மைக்கு தள்ளிவிடும்’.இதுவே, பின்னர், விஷ்ணுபுரம் ஞான சபையில் மகா அஜிதராலும் விளக்கப் படுகிறது.நாம் காணும், உணரும் அனைத்துமே மாறிக்கொண்டே இருப்பவை.அடையாளமற்று இருத்தலே மாற்றத்திற்கு தன்னை தயார் செய்துகொள்வதாகும். ஞானசபையின் எல்லா தரப்புகளையும் வாசித்திவிட்டு, அஜிதரின் இந்த விளக்கம் வரும் கணம், ஒரு வித நிம்மதி பரவுகிறது.வேண்டாம், இத்தனை ஞானத் தருக்கங்களையும் நான் சுமக்க வேண்டாம். அவற்றை என்னுடையதாக நான் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த கணமே, என் அடையாளமும் உடைகிறது. சமூகம் எனக்கு அளிக்கும் குழு அடையாளங்கள். எத்தனை பெரிய விடுதலை.
ஆனால், முழுமையாக ஞானத்தை துறந்துவிட்டு முன் செல்ல முடியுமா? வைதிகத்தின் ஞான தேடல் உண்மையில், சுய மையத் தேடலாக இருப்பதை சுட்டிதான், அஜிதர் பவதத்தரை வாதத்தில் வெல்கிறார். காலம் என்பதை மாற்றங்களின் தொடர் சங்கிலியெங்கிறார்.நாம் அறியக்கூடியது எல்லாம் காலம் ஒன்றையே என்கிறார். ஞானம் என்பதை அனைத்து பொருள்களின் இயல்புகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி என்று கொண்டால், அது அத்தனை கணமானதாக இருக்க முடியாது. அது, நம் சுய தர்மைத்தை கண்டுகொண்டு நிறைவுடன் செயலாற்றுவதற்கான மார்க்கமாக அமையக்கூடும். அஜிதர், வாதத்தில் வென்று திரும்பும் சமயம், பல வருடங்களாக விஷ்ணுபுரம் கோயிலில் மணி அடித்துக்கொண்டிருந்த அங்காரகன் எனும் யானையும், மனிதர்கள் தன் மீது ஏற்றிய மனித அடையாளங்களை உதரிக்கொண்டு காட்டினுள் ஓடி சென்று, தன் சுய இயல்பை மீட்டுக் கொள்கிறது.ஒளி விடும் மரமான, மிருக நயனியின் நிழலில் அஜிதர் தியானித்து திரும்பும் போது, அங்காரகன் அங்கு வருகிறது. மரத்தை தடவிப் பார்க்கும் அங்காரகனும், அதனுடன் சேர்ந்து ஒளிர்கிறது. ஞானசபையை வென்ற மறுகணமே, அறிதல் சொற்களாலானது அல்ல என்று உணர்ந்து, பெரும் சலிப்பிற்கு ஆட்படுகிறார் அஜிதர். அறிதல் என்றுமே உபதேசிக்க முடியாத ஒன்றல்லவா? ஒரு வேளை அஜிதருக்கே, விவாதம் முடிந்த பின் தான், தனக்கான அறிதல் நிகழ்ந்ததோ? தான் அறியக்கூடிய காலமும் இன்மையே என அனைத்தையும் துறந்துவிட்டாரா? சொல் மௌனத்திற்கு திரும்புவது போல!!
மனிதன் பதருவது எதற்காக? மரணம்? நான் இருப்பதும் இல்லாமலிருப்பதும், இந்த உலகிற்கு ஒரு பொருட்டல்ல என்ற அறிதலின் பதட்டம்? தன்னுடைய ஞான குரு, தன் இறுதி கட்டத்தில் வலியில் துடித்து இறப்பதைப் பார்த்து அவரை விலகிய லாமா, தன் சீடர்களை ஆரோக்கியசாலிகளாக பழக்குகிறார். தம் உடலை கடும் பயிற்ச்சிக்கு உட்படுத்தி பலசாலியாக இருக்கிறார். ஆனால், நடக்கையில், தென்னை மரத்திலிருந்து தேங்காய் தலையில் விழுந்து, இறந்துவிடுகிறார். இதை வாழ்வின் அங்கதமாக பார்ப்பதன் மூலம் தன்னை ஒரு ஞானத்தில் ஒரு படி உயர்ந்தவனாக தன்னை சந்திரகீர்த்தி எண்ணிக்கொள்கிறான். அஜிதரோ, ‘அப்படியா, நல்ல மனிதராயிற்றே’ என சிறு வருத்தத்துடன் முடித்து விடுகிறார்.
உண்மையில் எது தான் ஞானம் என்பதிலேயே நமக்கு பல குழப்பங்கள் இருக்கின்றன. சிந்தனை என்பதே எளிமையின் மறுமுனையில் துவங்குகிறது.
விஷ்ணுபுரம் ஞான சபையில் விவாதிக்கப் படும் அத்தனை தரப்புகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தனை சொல்லாடல்களையும் தொடர முடியவில்லை. மீண்டும் பல முறை படிக்க வேண்டும்.

அழகர் சாமியின் குதிரையை போலவே, அந்த திரைப்படமும் எங்கள் ஊரை விட்டு ஓடிவிட்டது என்று நினைத்து வருத்தபட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் நான் ஊர் திரும்பிய போது, அப்பா அதை கண்டு ‘பிடித்து’ வைத்திருந்தார்.எங்கள் ஊரிலும் மல்டிப்ளெக்ஸ் எல்லாம் வந்து வருடம் பல ஓடிவிட்டது.மற்ற தியேட்டர்களையெல்லாம் மறந்தும் விட்டோம்.நேரில் போய் டிக்கேட் வாங்குவதில்லாம் தொன் மரபாகிவிட்டது.அப்படி ஒரு சிறிய தியேட்டரில் படம் இளைப்பாறிக் கொண்டிருப்பது அறிந்து, அது ஓடுவதற்குள் பிடித்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் நேற்று மாலையே அடித்து பிடித்து மாலைக் காட்சிக்கு சென்று மூச்சிரைக்க 6:29 கு தியேட்டருக்குள் நுழைந்தோம்.ஒரே ஒரு கார் மட்டும் உள்ளே நின்றிருந்தது.அட்களே இல்லை.பதறி போய், காட்சி ஆரம்பித்துவிட்டதோ என்று அங்கிருந்த பெரியவரைக் கேட்டோம்.பார்கின் டிக்கெட் விற்பவர்.6 30 மணிக்குத் தாங்க படம் என்றார்.எதுக்கும் ஒரு முறை புரியாமல் கை கடிகாரத்தைப் பார்த்து முழித்தோம்.ஆளே இல்லாத டிக்கெட் கௌண்டர் உள் செல்லலாம் என்றார்.அதிகபட்சம் முப்பது ரூபாய்க்குத் தான் டிக்கெட் தருவார்களாம்.அது முதல் வகுப்பு டிக்கெட்.நாங்கள் நுழைந்தது, பின்னால் ஒருவர் தொடர்வது கண்டு, வரிசை சேர்வது போல நினைத்தேன்.அவர் எங்களை கடந்து, டிக்கெட் கவுண்டரைக் கடந்து தியேட்டர் காண்டீன் கவுண்டருக்கு சென்றுவிட்டார்.





