இனி என் ரோட்டில் மழை தான்.கடந்த ஒரு வார காலமாக பெய்து கொண்டிருக்கும் மழையே என்னை சற்று ஆயாசப் படுத்திவிட்டது.குதூகலமாக அலுவலகம் முடிந்து வெளியே வரும் பொழுது விழுந்து கொண்டிருக்கும் தூரலைப் பார்த்தால் ஏதோ ப்ரீ ஹிஸ்டோரிக் காலத்திற்கு சென்ற சந்தோஷம் கூடும்.முன்பு இருந்த பிராஜக்டில், நானும் பீனாவும் எட்டு மணி தாண்டி, வெளிச்சம் மறைந்து பெய்யக் கூடிய மழை எல்லாம் பெய்து முடிந்து வெளியேறும் போது எதோ விண்தளத்திலிருந்து பூமிக்கு திரும்பிய பிரமிப்பு இருக்கும்.ஒரு முறை மழை முடிந்து ஈரம் படிந்த தரையில் நடந்துக் கொண்டிருக்கும் போது சொன்னாள், ‘மழ தான் பெஞ்சிதா இல்ல, தண்ணி ஊத்தி கழுவிருக்காங்களா-நு கூட தெரில!’.சிறு சோகத்துடன் சிரித்து கொண்டோம்.இப்போது தீபாவுடன் வெளிச்சமும் மழையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்த போதும், பல நெருக்கடிகள்.கம்பனி சுவரைத் தாண்டி சாலையில் அடி எடுத்ததுமே தொடங்கிவிடும்.இத்தனை கம்பனிகள் அணிவகுத்து இருக்கும் இந்த பன்னெர்கட்டா சாலை மிகவும் குறுகியது.நைல் நதி போல.ஒல்லியான நீள பாதை.அதன் கரையில் தான் கார்பரேட் ஸிவிலைஸேஷனே தொடக்கம்.மாலை ஆறரை மணி தொடங்கி அது ஒரு நகரும் கார் பார்க்கின் லாட் ஆகிவிடும்.கம்பனி வாயிலிலிருந்து சாலையைக் கடந்தால் நேர் எதிரில் ஆட்டோ நிறுத்தம்.அங்கு சென்று ஆட்டோ நியாய விலைக்கு வாடகை பயணம் என்பது சாதாரண மாணவன் பணமோ மார்க்கோ இல்லாமல் பெரிய கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்று கேட்பது போன்றது.குறைந்தபட்சம் கையில் ஒரு லாப்டாப் பை இருக்கும் என்றால், உங்களையும் கொஞ்சம் மதித்து அட்டோ வேண்டுமா எனக் கேட்பார்கள்.அதுவும் மழைக் காலம் என்றால் எதுவுமே செல்லுபடியாகாது.பெருமதிப்புள்ள ஆட்டோ ஓட்டுனருக்கு நீங்கள் போக வேண்டிய இடம் பிடிக்க வேண்டும், அதற்கு குறைந்த பட்சம் இரண்டு மடங்கு பணம் கொடுக்க வேண்டும்.ஏனென்றால் அவர் உங்களை அடித்து செல்லும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றூம் வள்ளல்.டிராபிகில் தன் உயிரை பணயம் வைத்து கூட்டி செல்லும் ஹீரோ.அதற்கு நீங்கள் இரு மடங்காவது பணம் கொடுக்க வேண்டும் என்பது தர்மம்.இல்லை இல்லை, நான் கொஞ்ச தூரமாவது நடந்து, கடந்து செல்லும் ஆட்டோக்களை பிடித்துக் கொள்கிறேன் என்றால், தங்களுக்கு ஒரு வண்டர் லா அனுபவம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
பெங்களூரில் ‘பீச்’ இல்லை என்ற கவலையை பன்னெர்கட்டா சாலை பெருமனதுடன் தீர்த்து வைக்கிறது.ஒரு மாலை இவ்வழியாக நடை பாதையில் செல்ல வேண்டும்.சற்றே தூரியிருந்தால் போதும்.தெருவெங்கும் வெள்ளம்தான்.அலை வருவதற்க்கு கரையில் காத்து நிற்கும் அவலம் கூட இல்லை.நிமிடத்திற்கு ஒரு முறை உங்களை பேருந்து கடக்கும்போதெல்லாம், சாலையில் ஆடிபெருக்கென பொங்கும் தண்ணீர் தங்கள் பாதங்களை கழுவிச் செல்லும்.அதையும் தாண்டி அந்த சிறு சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் வரை சென்றுவிட்டால், இதோ இக்கரைக் கடந்தால் மீட்பர் வருவார் என்ற நம்பிக்கை மெலிதாக தோன்றும்.அங்குள்ள போலிஸின் அறிவுரைகளை எல்லாம் மீறி ஒரு ஹாரர் ரைடு போல அதையும் கடந்து நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம்.பெருமதிப்புள்ள ஆட்டோக்கள் கடந்து கொண்டே இருந்தன.ஒவ்வொருவரிடமும் இடத்தை சொல்லி பவ்யமாக நிற்கையில், தர்மத்திற்கு கேட்பது போன்ற பொருமையின்மையுடன் முகத்தை சுளித்து கடந்து செல்வார்கள்.சிலர் தம்மிடம் கொடுத்த கடனை கேட்டு துரத்துவது போல முகபாவமே இல்லாமல் கடந்து செல்வார்கள்.இன்னும் சிலர், நம்மை சந்திர மண்டலத்திற்கே கூட்டி செல்வது போல சாதாரணமாக அசாதாரண விலை சொல்வார்கள்.அப்போது தான் பெங்களூருக்கு ரஜினி எத்தனை அவசியம் என்று பட்டது.ஒவ்வொரு ஆட்டோவாக நிற்க வைத்து ‘நான் ஆட்டோக்காரன்’ பாட்டை பாடம் செய்ய சொல்ல வேண்டும்.காலையில் திறந்த வெளி பல் வினைத் தளமாக கண் குளிர பார்த்த அதே நடைபாதையில் மேலும் கால் வைக்க முடியாது மனம் சிக்கி, அங்கேயே உறைந்து நின்று விட்டோம்.அடுத்து யாராவது அவதாரம் தான் வந்து ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று காத்திருந்த போது ஒரு மெலிந்த மனிதர் ஆட்டோவில் மெதுவாக எங்கள் அருகில் வந்தார்.அப்போது கூட நான் நம்பவில்லை.பின் நாங்கள் ஏறி அமர்ந்ததும், நம்பிக்கை மிகுந்த கிருத்துவரான தீபா, தான் கடவுளிடன் பிரார்த்தித்துக் கொண்டதாக சொன்னார்! இனி எத்தனை பிரார்த்தனைகள் வேண்டுமோ!


